பிரிட்டன் பொறியியலுக்கு எங்கும் வேலை, எதிலும் வேலை.....
பொருளாதார தாராளமய உலகில், பொறியியல் படித்தவர்களுக்கு, எங்காவது, எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அதே பொறியியல் படிப்பை பிரிட்டனில் படிப்பவர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் அபரிமிதமானவை. உலகளாவிய அளவில் உள்ள பல நிறுவனங்கள் பிரிட்டனில் படித்த பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றன. உயர்தர கற்பித்தல் கொள்கை, பிரமாதமான உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் பொறியியல் கல்வியை, தொழிற்சாலை சூழலோடு இணக்கப்படுத்துவது போன்ற காரணங்கள், பிரிட்டன் பொறியியல் கல்வியை பிரபலமாக்குகின்றன. உலகெங்கிலும் இருந்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள், பிரிட்டனில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கின்றனர். பொறியியல் சேர்வதற்கான அடிப்படை தேவைகள்: இளநிலை படிப்புகளில் சேர, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். பள்ளி படிப்பை முடித்தவுடன் பிரிட்டனில் படிப்பதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகள் சேர்க்கை சேவைகள்(யு.சி.ஏ.எஸ்) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த அமைப்புதான், உயர்கல்விக்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான மைய அதிகாரத்தை பெற்றுள்ளது. மொத்தம் 6 பல்கலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை பொறியியல் படிப்பிற்கு 4 ஆண்டுகள் ஆகும். அதேசமயம், முதுநிலை படிப்பிற்கு 1 வருடம் மட்டுமே ஆகும். இங்கே படிப்பதற்கு நல்ல ஆங்கிலப் புலமை இருக்க வேண்டும் மற்றும் TOEFL அல்லது IELTS தேர்வில் அதிக மதிப்பெண்கள் இருப்பதும் அவசியம். சேரும் முன்பாக செய்ய வேண்டியவை: ஒரு கல்வி நிறுவனத்தை தேர்வுசெய்து அதில் சேரும் முன்பாக மாணவர்கள் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சேர விரும்பும் பல்கலையின் புகழ், அதனுடைய தரவரிசை, இருப்பிடம், அதிலுள்ள வசதிகள் மற்றும் அந்த பல்கலை வழங்கும் பாடங்களின் விவரங்கள் போன்றவற்றை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். பல பல்கலைகள், மாணவர்கள் விரும்பும் தகவல்களை கொடுப்பதற்கு பல நாடுகளில் தங்களின் அலுவலகங்களை வைத்துள்ளன. மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சேர விரும்பும் பல்கலை இணையதளத்திற்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது நலம். பிரிட்டன் பல்கலைகள் பல உதவித்தொகை திட்டங்களை வைத்திருப்பதால், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் அதுதொடர்பாக பேசி தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற முன்னேற்பாட்டு பணிகளை 3 அல்லது 6 மாதங்களுக்கு முன்னதாகவே செய்துமுடித்தால் நல்லது. இதனால் கடைசிநேர அவசரத்தை தவிர்க்கலாம். பிரிட்டன் பல்கலைகள், ஏரோநாட்டிக்ஸ், பயோ இன்ஜினீயரிங், சிவில், சுற்றுசூழல் அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன. புதிய படிப்புகள்: மாறிவரும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லண்டன் இம்பீரியல் கல்லூரியானது புதிய சிவில் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களால் விரும்பப்படும் சில படிப்புகளும் பிரிட்டன் பல்கலைகளில் உள்ளன. முதுநிலை படிப்புகளை எடுத்துக்கொண்டால், எம்.எஸ்சி. சஸ்டைனபில் எனர்ஜி சிஸ்டம்ஸ், எம்.எஸ்சி. சிக்னல் ப்ராசசிங் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ், அனலாக் சிஸ்டம் டிசைன், எம்.எஸ்சி. பயோ எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி. கார்பன் கேப்ச்சர் அண்ட் ஸ்டோரேஜ், எம்.எஸ்சி. சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி. பயோ மெக்கானிக்ஸ், எம்.எஸ்சி. ஸ்ட்ரக்சுரல் அண்ட் பயர் சேப்டி இன்ஜினீயரிங் போன்ற பலவித படிப்புகள் இந்திய மாணவர்களால் விரும்பப்படுகின்றன. பிரிட்டனில் பலரும் பொறியியல் படிக்க விரும்புவதற்கு முக்கிய காரணம், நாம் முன்பே கூறியதைப் போல, பல பெரிய உலகளாவிய நிறுவனங்களுடன் பிரிட்டன் பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு இருக்கும் நல்ல தொடர்பேயாகும். இதைத்தவிர பல கல்வி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் சந்தையில் தற்போதைக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப தங்களின் பாடத்திட்டங்களை வடிவமைத்து வைத்துள்ளதும் முக்கிய காரணம். மேலும் மாணவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்தில் பிரிட்டன் கல்வி நிறுவனங்கள் அதிக அக்கறை செலுத்துகின்றன. படிப்பதற்கான கட்டணம்: சமீபத்தில் ஏற்பட்ட 9 ஆயிரம் பவுண்டுகள் என்ற கட்டண உயர்வு, பிரிட்டனில் படிக்க நினைக்கும் பல வெளிநாட்டு மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது மற்றும் அவர்கள் தங்களின் தேர்வை மாற்ற வைத்துள்ளது. ஆனால், இந்த கட்டண உயர்வானது இளநிலை பட்டப் படிப்பு நிலையில்தான் நிகழ்ந்துள்ளதே தவிர, முதுநிலை அளவில் பெரிய கட்டண மாற்றம் எதுவும் நிகழவில்லை. முதுநிலை படிப்புகளுக்கு, தேர்ந்தெடுக்கும் பல்கலை மற்றும் பாடங்களுக்கு ஏற்ப 13 ஆயிரம் பவுண்டுகள் முதல் 17 ஆயிரம் பவுண்டுகள்(அதற்கும் கூடுதலாகவும் ஆகலாம்) வரை கட்டணங்கள் மாறுபடுகின்றன. இத்தகைய கட்டணங்களோடு ஒப்பிடுகையில், இளநிலை படிப்பிற்கான 9 ஆயிரம் பவுண்டுகள் என்பது குறைவுதான். பல மாணவர்கள் இந்த தொகையை, தரமான கல்விக்காக செலவழிக்க தயாராக இருப்பதாக தொடர்புடைய வட்டாரங்களில் கூறப்படுகிறது. பிரிட்டனில் பொறியியல் படித்துவிட்டு, தாய்நாடு திரும்பினாலும் சரி அல்லது வேறு பல உலகநாடுகளில் குடியேறினாலும் சரி, வேலைவாய்ப்பு 100 சதவீதம் நிச்சயம் என்றே கல்வியாளர்கள் பலரும் கூறுகிறார்கள். பொறியியல் படிப்பதற்கான பிரிட்டனின் சில சிறந்த கல்வி நிறுவனங்கள்: London Imperial college Cambridge University Oxford University Loughborough University Edinburgh University Manchester University Southampton University London University college Glasgow University Leeds University Cardiff University Nottingham University Warwick University.