உள்ளூர் செய்திகள்

பழைய நிறுவனத்தில் நீங்கள் புரிந்த சாதனைகள் என்ன?

நீங்கள் தற்போது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு, வேறொரு நிறுவனத்திற்காக உங்களின் ரெஸ்யூமை தருகையில், தற்போதைய பணியைப் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பீர்கள். உங்களின் தற்போதைய பணியைப் பற்றி ரெஸ்யூமில் குறிப்பிட்டிருந்தால், நேர்முகத் தேர்வின்போது கட்டாயம் அதைப்பற்றிய கேள்விகள் வரும். அவை, * உங்களின் தற்போதைய மற்றும் கடந்த கால பணிகளிலிருந்து நீங்கள் என்ன மாதிரியான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டீர்கள்? * அந்தப் பணிகளில் நீங்கள் சந்தித்த சவால்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீங்கள் அளித்த சிறந்த பங்களிப்புகள் மற்றும் உங்களின் புத்தாக்க முயற்சிகள் பற்றி கூறவும். * சிக்கல்களுக்கு உங்களால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் யாவை? அவை ஏற்கப்பட்டனவா? இதுபோன்ற கேள்விகளுக்கு நீங்கள் தெளிவின்றி ஏனோதானோ என்று பதிலளிக்கவோ அல்லது வெறுமனே கதையளக்கவோ கூடாது. இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி தப்பி விடலாம் என்று நினைப்பது தவறு. ஏனெனில், நீங்கள் தற்போது நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் நிறுவனம், உங்களின் பழைய பணி நிலையைப் பற்றி நன்கு விசாரிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. உங்களின் பணி நிலை என்ன? அதன்பொருட்டு உங்களின் பொறுப்புகள் என்னென்ன? மற்றும் நீங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவந்த மாற்றங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி உள்ளது உள்ளபடி தெளிவாக சொல்ல வேண்டும். அதேசமயம், நிறுவனத்திற்கான நீங்கள் ஏதேனும் ஆலோசனை வழங்கி, அது ஏற்கப்படாமல் போயிருந்தாலும்கூட, அதைப்பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லலாம். ஒரு நிறுவனத்தில் உங்களின் சாதனைகளை, நிதி தொடர்பாகவோ, மனித ஆற்றல் தொடர்பாகவோ, பணியை எளிமைப்படுத்துதல் தொடர்பாகவோ அல்லது புதிய அமைப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவோ அல்லது கழிவுகளை குறைப்பது தொடர்பாகவோ அல்லது செலவினங்களை குறைப்பது தொடர்பாகவோ என்ற வகைகளில் மிகத் தெளிவாக மதிப்பிட்டு எடுத்துக்கூற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !