பள்ளிக்குத் தேவை புதிய கட்டடம் மனமகிழ் மன்றம் வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் 217 பேர் முறையீடு
திண்டுக்கல்: பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டி கொடுங்க, மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி கொடுக்காதீங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 217 பேர் கலெக்டர் பூங்கொடியிடம் முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 217 மனுக்கள் பெறப்பட்டன. இதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், செல்வம், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி கலந்து கொண்டனர்.நிலக்கோட்டை சிவஞானபுரம் பகுதி பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓடுடன் கூடிய கட்டிடம் என்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிதலமடைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன.தற்போது ஒரு வகுப்பறை உள்ள கட்டடத்திலே மாணவர்கள் பயின்று வருகின்றனர். படிப்பதும் உணவருந்துவதும் ஒரே அறையாக உள்ளது. குடிநீர், கழிப்பறை வசதி எதுவும் இல்லாததால் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். புதிய கட்டடங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.அனுமதி கொடுக்காதீங்கசமூக ஆர்வலர் ராஜேஸ் கண்ணன் அளித்த புகார் மனுவில், திண்டுக்கல் மாநகர் நுழைவு பகுதிகளில் மனமகிழ் மன்றம், கிளப், தனியார் பார் என போர்டுகள் வரவேற்கும் வகையில் உள்ளது.மேலும் மருத்துவமனை, முக்கிய ஓட்டல்கள், பஸ் நிறுத்தங்களில் உள்ள இதுபோன்ற மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.