சட்டக்கல்லுாரி தேர்வு முடிவுகளில் குளறுபடி; முதல் லிஸ்ட்டில் பாஸ்... அடுத்த லிஸ்ட்டில் பெயில்
புதுச்சேரி: சட்டக்கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் குளறுபடியாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரியக்காலாப்பட்டில் புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக் கல்லுாரி மூன்றாண்டு, ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் மற்றும் பட்டய சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மூன்றாண்டு சட்டப் படிப்பில் இறுதியாண்டில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இவர்கள் எழுதிய இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை, புதுச்சேரி பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்டது. இதில் 16 மாணவர்கள் தேர்ச்சியடைந்ததாகவும், பிற மாணவர்கள் தோல்வியடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நன்றாக படித்த மாணவர்கள் பெயிலாகி இருக்க, ஆவரேஜ் மாணவர்கள் பாஸ் ஆகி இருந்தனர்.அதிர்ச்சியடைந்த மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், ஏற்கனவே வெளியிட்ட தேர்வு முடிவுகளை பல்கலை நிர்வாகம் திடீரென திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய தேர்வு முடிவுகளை கல்லுாரிக்கு அனுப்பியது. இந்த தேர்வு முடிவை பார்த்த மாணவர்கள், மேலும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.ஏற்கனவே பாஸ் ஆகியிருந்த 16 மாணவர்களில் 10 பேர் தோல்வியடைந்திருந்தனர். அதே நேரத்தில் ஏற்கனவே தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆவேசமடைந்த மாணவர்கள் நேற்று நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு சென்று முறையிட்டனர். தொடர்ந்து அனைத்து மாணவர்களும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர்.இதுகுறித்து சட்டக்கல்லுாரி மாணவர்கள் கூறுகையில், சட்டக்கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் அலட்சியமாக வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவு எழுதி வைத்திருந்த ஒரு பண்டல் மாறிவிட்டதால், ஒட்டுமொத்தமாக தேர்வு முடிவுகள் மாறிவிட்டதாகவும், அதனால் புதிய தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதாக அலட்சியமாக கூறுகின்றனர். கவனமாக கையாள வேண்டிய தேர்வு முடிவுகளில் பொறுப்பு இல்லாமல் செயல்பட்டுள்ளனர்.இதற்கான காரணமாக அதிகாரிகள் மீது புதுச்சேரி பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.