அரசு பள்ளி நிலத்தை மீட்டு தர வேண்டும்: தபால் அனுப்பும் போராட்டம் துவக்கம்
பந்தலுார்: பந்தலுார் அருகே மராடி அரசு பள்ளி நிலத்தை, ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு தர கோரி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் போஸ்ட் கார்டு அனுப்பும் போராட்டத்தை துவக்கினர்.எருமாடு அருகே மராடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் மலையாள வழியில் செயல்படும் இந்த பள்ளிக்கு, 3.11 ஏக்கர் நிலம் உள்ளது.அதில் பள்ளிக்கு அருகே நிலம் வைத்திருப்பவர், பள்ளிக்குரிய நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதனால், பள்ளி நிலத்தை, நில அளவை செய்து தருமாறு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.இது குறித்து, பந்தலுார் தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட முறை, மக்கள் நேரில் மனு அளித்துள்ளனர்.ஐந்து முறை நில அளவு பணிஅதனை தொடர்ந்து ஐந்து முறை நில அளவையும் செய்யப்பட்டது. ஆனால், நில அளவை பணியை, நில அளவையாளர்கள் முழுமை படுத்தாமல் பாதியில் விட்டு சென்றதால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் விடப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்த, கழிப்பிடத்தை ஒட்டி புதிதாக வேலி அமைத்துள்ளார். இது குறித்து ஆய்வு செய்து புல தணிக்கை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தாசில்தார்க்கு மனு கொடுத்துள்ளார்.ஆலோசனை கூட்டம்இந்நிலையில், நேற்று பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில், ஆலோசனைக் கூட்டம் எருமாடு பகுதியில் நடந்தது. பி.டி.ஏ. துணைத் தலைவர் சுனில் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்பீனா, துணைத் தலைவர் விஜயலட்சுமி, நிர்வாகிகள் ஜார்ஜ் மேத்யூ, தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.அதில், பள்ளிக்கு சொந்தமான நிலத்தில உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு போஸ்ட் கார்டில் புகார் அனுப்புவது. தீர்வு கிடைக்காவிட்டால் மாணவர்களின் மாற்று சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். கூட்டத்தில், கவுன்சிலர் சுஜிதா, பி.டி.ஏ. நிர்வாகிகள் நிசார், சுகரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.