காரைக்கால் மாணவர்கள் புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை பார்வையிட ஏற்பாடு அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புதுச்சேரி: தேசிய சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாணவர்கள் புதுச்சேரி சுற்றுலாத் தலங்களை பார்வையிட இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் லட்சுமிநாராயணன் செய்திக்குறிப்பு:இன்று (25ம் தேதி) தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியின் ஆன்மிக வளம், கடற்கரைகள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பூங்காக்கள் போன்றவற்றை ஆண்டிற்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர்.சுற்றுலாப் பயணிகள் பெறக்கூடிய அனுபவத்தை, காரைக்கால் அரசு பள்ளி மாணவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் தேசிய சுற்றுலா தினமான இன்று (25ம் தேதி) 200 மாணவர்கள், புதுச்சேரி சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு, கல்வித்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாவின் முக்கியத்துவத்தை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அறியும் வகையில் மாகே மற்றும் ஏனாம் பிராந்திய மாணவர்களும் புதுச்சேரி சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கான பயண ஏற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ளது.இதற்கிடையே, சர்வதேச அளவில் சுற்றுலா சென்று பார்வையிட சிறந்த 30 இடங்கள் ஆஸ்திரேலியா நாட்டின் 'லோன்லி பிளானட் (lonely planet) ஊடக நிறுவனம் புதுச்சேரியைஇரண்டாவது சிறந்த சுற்றுலாத்தலமாக தரவரிசைப் படுத்தியுள்ளது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.