குறுமைய விளையாட்டு - கூடுதல் நிதி ஒதுக்க உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
உடுமலை: குறுமைய விளையாட்டு போட்டிகளின்போது, அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி கல்வித்துறை சார்பில், குறுமைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். கபடி, கோ-கோ, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட 10 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறுமைய அளவில் வெற்றி பெறுவோர், மாவட்டம், மண்டலம், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த மாதம் 22ம் தேதி நடந்த, குறுமைய விளையாட்டு போட்டியின்போது, உடுமலை மைதானத்தில் மயங்கி விழுந்து, உடனடி சிகிச்சை பெற வழியின்றி, மாணவி இறந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, போட்டி நடக்கும் இடத்தில் குடிநீர் வசதி, ஓய்வெடுக்க நிழற்பந்தல், முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்; டாக்டர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், போதியளவு நிதி இல்லாததால், போட்டி நடத்தவும், மைதானத்தில் தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்துவதிலும் சிக்கல் நிலவுவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: குறு மையத்தில் உள்ள ஒரு மையத்துக்கு, 2012ம் ஆண்டு வரை ரூ.6 ஆயிரம் வீதம் ஒதுக்கப்பட்டது. இது போதவில்லை என்பதால், பெரும்பாலும் தனியார் பள்ளிகளே போட்டிகளை நடத்தின. கடந்தாண்டு, அரசு பள்ளிகளில் குறுமைய விளையாட்டு போட்டி நடத்த வேண்டும் என உத்தரவிட்ட அரசு, ஒரு குறுமையத்துக்கு ரூ.90 ஆயிரம் நிதி ஒதுக்கியது. சான்றிதழ், பதக்கம், அடிப்படை வசதி, நடுவர் ஊதியம் போன்றவற்றுக்கு இத்தொகையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இது, போதுமானதாக இல்லை. இதனால், விதிமுறை களை முழுமையாக பின்பற்ற இயலவில்லை. குறுமைய விளையாட்டு போட்டியை வெற்றிகரமானதாக்க, அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். பொறுப்பாளர்களிடம் அறிக்கை பெற்று, போதியளவு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "குறுமைய விளையாட்டு போட்டிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் அரசுக்கு ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கிறோம். அடிப்படை வசதிகளை முழுமையாக செய்துதர, கூடுதல் நிதி அவசியமாகிறது. விளையாட்டின் முக்கியத்துவம் கருதி, அரசு தரப்பில் போதிய நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.