பெங்களூரு தமிழ்ச் சங்கமும், சென்னை அமிழ்த தமிழ் ஆய்வரங்கமும் நடத்திய திருக்குறள் மாநாடு
பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச் சங்கமும், சென்னை அமிழ்த தமிழ் ஆய்வரங்கமும் இணைந்து, திருக்குறள் மாநாடு நடத்தின. கடந்த 14ம் தேதி காலை, திருக்குறள் முற்றோதலுக்கு பின், சென்னை அமிழ்தத் தமிழ் ஆய்வரங்க கவிஞர்களும், பெங்களூரு கவிஞர்களும், அறத்தாறு, தவம், உரைப்பார் உரைப்பவை, அருளும் பொருளும், உழுவாரும் எழுவாரும் பற்றற்கரியது, குறிப்பறிதல், உள்ளம்கொளல், ஆற்றுவார் ஆற்றல், நிறை உடையேன் ஆகிய தலைப்புகளில் கவிதை வாசித்தனர். மாலையில், கவிக்கோ ஞானச்செல்வன் தலைமையில் வாழ்க்கையில் பெரிதும் இன்பந்தருவது அறமே! பொருளே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை அறிமுக விழாவின்போது, சிலம்பொலி யார்? என்ற குறும்படம் திரையிடப்பட்டது. கடந்த 15ம் தேதி, நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஊர்வலமாக சென்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தபின், ஸ்ரீமதி, கல்யாணி ஆகியோரின் பாரதியார், பாரதிதாசன் பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. காலையில், அறிஞர் ஜெகதீசனின், பெருங்கதை இலக்கிய ஆய்வுரை, சென்னை கல்யாணி பரத நாட்டிய வித்யாலயாவை சேர்ந்த புவனேஸ்வரி நாராயணசாமி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மதியம், பரிசளிப்பும், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.