வட மாநிலத்தினர் தமிழில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணி நியமனம் பெறுவது எப்படி?
மதுரை: வட மாநிலத்தினர், தமிழில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, இங்கு பணி நியமனம் பெறுவது எப்படி சாத்தியமாகிறது எனத் தெரியவில்லை என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்தது.துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர், நீலகிரியில் உள்ள மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலையின், &'கெமிக்கல் பிராசசிங் ஒர்க்&' பணி தேர்வில் பங்கேற்றார். 40 மதிப்பெண் பெற்றார். பணி வழங்கவில்லை. சரவணகுமார், &'என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. என்னை பரிசீலிக்கவில்லை. எனக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்&' என, உயர் நீதிமன்ற கிளையில், மனு செய்தார்.தனி நீதிபதி, &'காலியாக உள்ள இடத்தில், மனுதாரருக்கு பணி வழங்க பரிசீலிக்க வேண்டும்&' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலை தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் சட்டத் திருத்தத்தின்படி எழுத்துத் தேர்வில் கூடுதலாக, 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் எழுத்துத் தேர்வில், 36 மதிப்பெண் பெற்றவர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி முடித்ததற்கு, 5 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டது. அதன்படி, 41 மதிப்பெண் பெற்ற சிலர் நியமிக்கப்பட்டனர். விதி மீறல் இல்லை. இதில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தான் நிவாரணம் தேட முடியும். தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு: தமிழகத்தில் மின் வாரியம் உட்பட சில துறைகளில், பிற மாநிலத்தவர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.ஒரு மாநிலத்தில் பணியில் சேரும் பிற மாநில அலுவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில், அம்மொழியில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும். இதில், தேவையற்ற அரசியல் நிலவுகிறது.வட மாநிலத்தினர் ஹிந்தியில் தேர்ச்சி பெற இயலாத சூழ்நிலையில், தமிழில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, இங்கு பணி நியமனம் பெறுவது எப்படி சாத்தியமாகிறது எனத் தெரியவில்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கின்றனர். தேர்வு முறையில் நேர்மை, வெளிப்படைத் தன்மை அவசியம்.நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலை பணி தேர்வு விடைத்தாள்களை அழித்து விட்டதாக, மனுதாரர் தரப்பு அச்சம் தெரிவிக்கிறது.நியமனம் எதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது, விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என, மத்திய அரசுத் தரப்பில் அடுத்த வாரம் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.