ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் சீட் மறுப்பு: விதிகளை அறிந்தால் வராது வெறுப்பு
கோவை: கோவை மாவட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி பெற சமர்ப்பித்த ஆவணங்கள் போதவில்லை எனக் கூறி, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, ஆவணங்களை சமர்ப்பிக்க குறுகிய அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், சீட் கிடைக்காமல் ஏமாறும் நிலை உருவாவதாக, பெற்றோர் குமுறுகின்றனர்.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 2024--25ம் கல்வி ஆண்டுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும் 1ம் வகுப்புக்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு ஏப்., 22ம் தேதி துவங்கி, மே 20ம் தேதியுடன் நிறைவடைந்தது.கோவை மாவட்டத்தில், 324 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, 15 ஆயிரத்து, 347 இடங்கள் உள்ளன. இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், கல்வி பயில, 3 ஆயிரத்து 879 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.நிராகரிப்புஇப்பள்ளிகளில் சேர, 4 ஆயிரத்து 186 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 3 ஆயிரத்து 674 மாணவர்கள் ஆர்.டி.இ., விதிமுறைப்படி இலவச கல்வி பெற தகுதி பெற்ற நிலையில், 123 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல, ஆவணங்கள் விடுபட்டுள்ளதாகக் கூறி, 389 மாணவர்களின் விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.இந்நிலையில், ஆவணங்கள் விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அதனை சமர்ப்பிப்பதற்கு குறுகிய காலஅவகாசம் மட்டுமே வழங்கப்படுவதால், பெற்றோர் பலரும் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக குற்றம்சாட்டுகின்றனர்.கோவை சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த பெற்றோர் ருக்சனா பேகம்கூறியதாவது:எங்கள் மகள் அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில், ப்ரீ.கே.ஜி., படித்து வருகிறார். எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம். முகவரிக்கான ஆவணமாக, காஸ் பில் வைத்து விண்ணப்பித்தோம். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்தது.இதற்கு முன், ரத்தினபுரியில் வசித்ததால் அனைத்து அரசு ஆவணங்களும் பழைய முகவரியிலேயே உள்ளன.அதிகாரிகள் கவனிக்கணும்இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, முகவரிக்கான ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை அல்லது வங்கிக் கணக்கு புத்தகத்தை கேட்கின்றனர். கடைசி நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், எனது மகளுக்கு சீட் கிடைக்கவில்லை.ஆதார், குடும்ப அட்டைகளை விண்ணப்பித்துப் பெற, சுமார் 15 நாட்களுக்கு மேலாகும். இந்நிலையில், கடைசி நேரத்தில் ஆவணங்களை எப்படி சமர்ப்பிக்க முடியும். இப்பிரச்னை மீது அதிகாரிகள், உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'. இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, தனியார் பள்ளி தொடக்க கல்வி இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், காஸ் பில் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆன்லைனில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், விடுபட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க, பள்ளி வாயிலாக அறிவுறுத்தப்படும்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், தேவையான ஆவணங்கள் குறித்த அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பெற்றோர் விழிப்புணர்வுடன் இருந்தால், இறுதி நேர ஏமாற்றங்களை தவிர்க்கலாம், என்றார்