உள்ளூர் செய்திகள்

பள்ளி வேலை நாட்களை அதிகரிக்க வேண்டாம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

தேனி: மாணவர்கள் பள்ளி வருகை நாட்கள் குறையும். இடைநிற்றல் அதிகரிக்கும் சூழல் உருவாகும். கற்றல்திறன் சிறப்பு வகுப்புகள் பாதிக்கப்படும் என்பதால் அரசு பள்ளி வேலை நாட்களை அதிகரிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித்துறை 2024 - 2025 நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் 220 ஆக உயர்த்தப்பட்டு அட்டவணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 19 சனிக்கிழமைகள் வேலை நாட்களாகும். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வருகை குறையும். விரக்தி அதிகரிக்கும். இடைநிற்றல் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.அதை தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக 10, பிளஸ் 1, பிளஸ் 2வில் சனிக்கிழமைகளில் ஆசிரியர்கள் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி வருகின்றனர்.இதுதவிர அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சனிக்கிழமையை வேலை நாட்களாக அறிவித்ததால் கற்றல் திறன் பாதிக்கும். எனவே பள்ளி வேலைநாட்களை அதிகரிக்க கூடாது என அரசுக்கு எங்கள் கருத்தை கடிதமாக அனுப்பி உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்