சக் ஷம் அங்கன்வாடிகள் திறக்க திட்டம்; குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தகவல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், ஊட்டச்சத்து மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சக் ஷம் திட்டத்தில், 15 அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்படுகின்றன.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகள் வரை, முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு, மையங்களை சுற்றியுள்ள, இரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்குதல், கிரஷ் மையங்களில் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இதேபோல, இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சத்துமாவு, மதிய உணவுடன், கல்வி கற்பிக்கப்படுகிறது.இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மற்றும் கல்வியில், தரத்தை மேம்படுத்த வடக்கு ஒன்றியத்தில் 4 சக் ஷம் அங்கன்வாடிகள்; தெற்கு ஒன்றியத்தில், 11 'சக் ஷம்' அங்கன்வாடிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மையங்களில், தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், எல்.இ.டி., திரைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பீரோ, கற்றல் உதவி ஓவியங்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படும்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:அங்கன்வாடிகளில், கே.ஜி., வகுப்புகளை போல், விளையாட்டு வழி கல்வி, ரைம்ஸ் எனப்படும் பாடல்கள் இசைத்தல், செய்கை வழியில் புரிய வைத்தல் என பல்வேறு மாற்றங்களுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தற்போது, சக் ஷம் அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால், குழந்தை நேய கழிப்பிட வசதி, தோட்டத்துடன் கூடிய காற்றோட்டமான சூழல் உருவாக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக, அங்கன்வாடிகளின் தரம் மற்றும் பாடத்திட்டம் வடிவமைக்கப்படுவதால், குழந்தைகள் சேர்க்கை அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.