ஆன்லைன் மோசடியை தடுக்க நடவடிக்கை; நீலகிரியில் சைபர் பள்ளி கூட திட்டம் அறிமுகம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை தவிர்க்க, சைபர் பள்ளி கூட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.நீலகிரியில் ஆன்லைன் மோசடி மூலம் பலர் பாதிக்கப்பட்டு வருவது சமீப காலமாக தொடர்ந்து வருகிறது. போலீசார் சார்பில் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை மேம்படுத்தும் விதமாக, சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, வாரத்தில் சனிக்கிழமை நாளில், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, முகநுாலில் சைபர் கிரைம் குறித்து வல்லுனர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பொது மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சைபர் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, பள்ளி கல்லுாரி மாணவர்கள், வேலைகளுக்கு செல்பவர்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஓ.டி.பி., தகவல்களை யாருக்கும் சொல்லாமல் இருப்பது; அறிமுகம் இல்லாத நபர்களின், வீடியோ அழைப்புகளை தவிர்ப்பது முக்கியம். டிஜிட்டல் கைது என கூறி கொண்டு, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்குகளுக்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.அவ்வாறு பணம் இழப்பு ஏற்படும் பட்சத்தில், உதவி எண்: 1930 மற்றும் https://cybercrime.gov.in என்ற இனிய தலை முகவரியில் புகார் அளிக்கலாம், என்றார். நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., நவீன், இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்--இன்ஸ் பெக்டர் தவமுனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.