பி.எல்.ஓ. பணியால் கற்பித்தல் பணி பாதிப்பு: பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை
கோவை: ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) பணிகளில் இருந்து, ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.பி.எல்.ஓ., பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் தேசிய வாழ்வாதார திட்ட ஊழியர்கள் போன்றோரை ஈடுபடுத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களும், பி.எல்.ஓ. பணிகளில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முன்னதாக, பி.எல்.ஓ. பணியில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், கற்பித்தல் பணிகளில் தேக்கம் ஏற்படுவதாக, ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'கிராமப்புற பள்ளிகளில், பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் பி.எல்.ஓ. பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் தலா இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் வரை, இந்த பணியில் உள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைவு, மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகம், அதனால் இந்த வேறுபாடு' என தெரிவிக்கின்றனர்.பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள், 'ஈராசிரியர்' பள்ளிகளாகவே உள்ளன. அதில் ஒரு ஆசிரியர் பி.எல்.ஓ. பணிக்கு சென்றுவிட்டால், எஞ்சிய ஒரு ஆசிரியர் இரண்டு ஆசிரியர்களின் பணியையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.அரசின் அறிவுறுத்தல்படி, ஒப்பந்த ஆசிரியர்களை இந்த பணியில் ஈடுபடுத்தலாம். ஆனால், இந்த பணியில் பெரிதாக அவர்களை ஈடுபடுத்துவதில்லை. பள்ளிகளில் ஏற்கனவே நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களை திறன், 'ஸ்லாஸ்' போன்ற சிறப்பு தேர்வுகளுக்கு தயார்படுத்தும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு இடையில், தற்போது இந்த கூடுதல் பணியையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதால், கற்றல் பணி நிச்சயமாக பாதிக்கப்படும்' என்றனர்.பள்ளிகளில் ஏற்கனவே நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களை திறன், 'ஸ்லாஸ்' போன்ற சிறப்பு தேர்வுகளுக்கு தயார்படுத்தும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு இடையில், தற்போது இந்த கூடுதல் பணியையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதால், கற்றல் பணி நிச்சயமாக பாதிக்கப்படும்.