எம்.பி.பி.எஸ் எழுத அனுமதி கோரிய டி.டி., கல்லூரி மாணவர்கள் மனு தள்ளுபடி
திருவள்ளூர் மாவட்டத்தில், டி.டி., மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு, 2011-12, 2012-13ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள், 148 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது: எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வு, ஆக., 1ல் துவங்குகிறது. எங்களுக்கு, "ஹால் டிக்கெட்" வழங்கும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையிடம் கேட்டோம். "இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி, மாணவர்களை சேர்த்ததால், எங்களுக்கு, "ஹால் டிக்கெட்" வழங்க முடியாது" என, பல்கலை மறுத்து விட்டது. கல்லூரிக்கு அனுமதி வழங்க மறுத்தது பற்றி, இந்திய மருத்துவ கவுன்சிலோ அல்லது எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையோ, பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. கணிசமான தொகையை நன்கொடையாக கொடுத்து, கல்லூரியில் சேர்ந்தோம். எங்களை, கல்லூரி நிர்வாகம் ஏமாற்றி விட்டது. எங்களை தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும். நாங்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததை சட்டவிரோதமானது என, மருத்துவ கவுன்சில் மற்றும் பல்கலை கருதக் கூடாது என, உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அப்பீல் மனு மீது, தீர்ப்பளிக்கும் வரை, 2010-11ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாக, எங்களை கருத வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு, மாணவர்களை சேர்க்க, கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில், அனுமதி அளிக்கவில்லை. இது தெரியாமல், கல்லூரியில் சேர்ந்து விட்டனர் என்பதற்காக, அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி, முதலில் அவசியம். கவுன்சில் அனுமதியின்றி மாணவர்களை சேர்த்தால், கல்லூரியிடம் இருந்து நஷ்டஈடு தான் கோர முடியும். கல்லூரி ஒப்புதல் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளாமல், படிப்பில் சேர்ந்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற வழிமுறைகள் இருக்கும் போது, தங்கள் பணத்தை செலவழிப்பதற்கு முன், உண்மை நிலவரத்தை அறிய, மாணவர்கள் முயற்சி எடுத்திருக்க வேண்டும். மருத்துவ கல்வியை, மற்ற வணிகம் போல் கருதி, மாணவர்களை ஏமாற்றுகின்றனர். அடிப்படை வசதியற்ற கல்வி நிறுவனங்கள், காளான்கள் போல் பெருகுவது, சமூகத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல். இதனால், தரமானவர்களை கொண்டு வர முடியாது. அடிப்படை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கல்லூரிக்கு அனுமதி வழங்க, மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது. எனவே, அடிப்படை வசதியற்ற கல்லூரியில், மனுதாரர்கள் படித்துள்ளனர். இரக்கப்பட்டு, இந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. மாணவர்களின் கதி பற்றி எனக்கு தெரிந்தும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், விதிமுறைகளை மீறும்படி, எம்.சி.ஐ., மற்றும் பல்கலைகழகத்துக்கு உத்தரவிடுவது போலாகும். தற்போது, சுப்ரீம் கோர்ட்டில் பிரச்னை உள்ளது. எனவே, தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை; மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், சாந்தாராம் கூறியதாவது: டி.டி., மருத்துவக் கல்லூரிக்கு, கடந்த 2011-12, 13 ஆகிய கல்வியாண்டுகளுக்கு, அனுமதி இல்லை. மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாத நிலையில், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க முடியாது. தேர்வெழுத அனுமதி கொடுத்தாலும் அது பயனற்றதாகிவிடும். இதனால், டி.டி. மருத்துவக் கல்லூரியின் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள், 96 பேர் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.