அமெரிக்கன் கல்லூரி எம்.பி.ஏ., அங்கீகாரம் ரத்து செய்ய நோட்டீஸ்: ஐகோர்ட் தடை
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி எம்.பி.ஏ.,வில் விதிகளை மீறி கூடுதல் மாணவர்களை அனுமதித்துள்ளதாக ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பிய நோட்டீசுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தாக்கல் செய்த மனு: கல்லூரியில் எம்.பி.ஏ.,படிப்பு 1995 ல் துவக்கப்பட்டது. இத்துறையை மதுரை காமராஜ் பல்கலை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கீகரித்துள்ளன. ஏ.ஐ.சி.டி.இ.,2007 ல் ஒரு பட்டியல் வெளியிட்டது. அதில், எங்கள் கல்லூரியில் எம்.பி.ஏ., படிப்பிற்கு ஆண்டுதோறும் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டது. ஆனால், 60 மாணவர்களை சேர்த்துக்கொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பிற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கவில்லை எனக்கூறி, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிற்கு, 2007-2008 க்கு கோர்ட் தடை விதித்தது. மீண்டும் 2008 ல் தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அப்போது, கல்லூரி நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. நிர்வாக பொறுப்பில் இருந்தவர்கள், ஐகோர்ட் உத்தரவு பற்றி தெரிவிக்கவில்லை; ஏ.ஐ.சி.டி.இ., மூலம் அறிந்தோம். ஏ.ஐ.சி.டி.இ., மே 29 ல் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், "உங்கள் கல்லூரி எம்.பி.ஏ.,வில் 30 மாணவர்களைத்தான் அனுமதிக்க முடியும். ஆனால், விதிகளை மீறி 60 பேரை அனுமதித்துள்ளீர்கள். எம்.பி.ஏ.,விற்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?" என குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னாட்சி கல்லூரி முடிவுகளில், ஏ.ஐ.சி.டி.இ.,தலையிட முடியாது என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., நோட்டீசுக்கு மனு நிலுவையில் உள்ளவரை தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பிற்கு 8 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.