உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகள்; கட்டட வசதியின்றி திறந்த வெளியில் வகுப்புகள்

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகள் பல காணப்படும் நிலையில், சில பள்ளிகளில் போதிய கட்டட வசதி இல்லாததால் திறந்த வெளியில் வகுப்புகள் நடப்பதும் தொடர்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இன்றும் பழைய கட்டடத்திலே இயங்கி வருகிறது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூறை பெயர்ந்தும் காணப்படுகிறது. மாணவ, மாணவிகள் ஒரு வித அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். கட்டங்கள் மோசமடைந்த பள்ளிகளில் திறந்த வெளிதான் வகுப்பறைகளாக செயல்படுகிறது. மழை நேரத்தில் திடீரென ஏற்படும் இடி, மின்னலால் பாதிக்கும் நிலையும் தொடர்கிறது. கட்டடங்களை முறையாக பராமரித்தாலே ஓரளவு தீர்வு கிடைக்கும், அதற்கும் வழி இல்லை. பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறையோ, மேலிடத்து உத்தரவு வந்தாலே பராமரிப்பு என்ற பிடிவாதத்தில் உள்ளது. பள்ளி துறையோ, இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்புகிறதா என்றால் அதுவும் இல்லை. இது போன்ற காரணங்களால், பாதிப்புக்குள்ளாவது என்னவோ, மாணவர்கள்தான். மாவட்டத்தில்,காரியாபட்டி அருகே சத்திரம் புளியங்குளம் பள்ளி, கட்டட மேற்கூரை உடைந்து, மாணவர்கள் மீது விழுந்ததில், காயத்துடன் தப்பினர். கூடுதல் கட்டடம் கட்ட, கிராமத்தினர், பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை இல்லை. இதனிடையே தற்போது, கடந்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாக வேறு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு முதல் 10ஆம் வரை, கட்டட வசதி இல்லாததால், ஊராட்சி அலுவலகத்தில், வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இட நெருக்கடியில் மாணவர்கள், மூச்சு கூட விட முடியாமல், சிரமப்படுகின்றனர். இது போன்றுதான் பல பள்ளிகள் இயங்கி வருகிறது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி, இது போன்ற பள்ளிகளில், பராமரிப்பு பணி தொடர, சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும். விருதுநகர் கென்னடி, "மாவட்டத்தில், குறிப்பாக கிராம பள்ளி கட்டடங்கள், ஆங்காங்கு விரிசல் விழுந்து காணப்படுகிறது. புதிதாக கட்டப்படும் கட்டடங்கள், ஒரு சில மாதத்திலேயே, கீறல் விழுந்து காணப்படுகிறது. பள்ளி கல்விக்காக, அரசு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ய, அறிவிப்பு செய்துள்ளது. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகள் இடிந்தும், தரைதளம் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதற்கு பயந்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை மரத்தடியில் வைத்து, பாடம் நடத்துகின்றனர். இது போன்ற கட்டடங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார். சத்திரம் புளியங்குளம் சுப்பிரமணியன், "கட்டட சேதத்தால், மாணவர்கள் மரத்தடி, பக்கத்து வீட்டு திண்ணையில் படிக்கின்றனர். கூடுதல் கட்டடம் கட்டித் தர, புகார் கொடுத்தாலும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. பள்ளி கட்டடம் இடிந்தும் அதை அப்புறப்படுத்தாமல், அப்படியே விட்டுவிட்டனர். மழை நேரங்களில், இக்கட்டடத்தில் ஒதுங்கினால், மாணவர்களின் நிலை என்னவாகும் என, அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்," என்றார். மல்லி கனகவேல், "அரசு பள்ளிகள் பல, பழமையான ஓட்டு கட்டடங்களில், இன்றும் செயல்பட்டு வருகிறது. அவற்றை இடித்து, கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய, கான்கிரீட் கட்டடங்களின் மேற்கூரைகள், சேதமடைந்த நிலையில் உள்ளது. பள்ளி குழந்தைகள் பாதிக்கும் நிலை ஏற்படும்," என்றார். சத்திரம் புளியங்குளம் ஊராட்சித் தலைவர் தங்கப்பாண்டி, "பள்ளிக் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டாண்டுகள் ஓடி விட்டன. கலெக்டரிடமும், அதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளேன். ஆனால், நடவடிக்கைதான் இல்லை," என்றார். தம்பிபட்டி அனீபா, "வத்திராயிருப்பு பகுதியில், பல பள்ளி கட்டட சென்ட்ரிங் பூச்சு, அவ்வப்போது பெயர்ந்து விழுவதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. இடமில்லை என்பதால், சேதமான கட்டடங்களில் பிள்ளைகளை உட்கார வைக்கின்றனர். மின் வயர்களும் சேதமடைந்த நிலையில், ஆங்காங்கே தொங்குகின்றன. கோட்டையூரில், மின்வயர் பட்டு ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம், எங்களை பெரும் பயத்திற்குள்ளாக்கி உள்ளது. பிள்ளைகள், வீடு வந்து சேர்ந்தால்தான் உறுதி என்ற நிலையில், இன்றைய பள்ளி கட்டடங்கள் உள்ளன," என்றார். நரிக்குடி குமார், "நரிக்குடி பகுதியில் அரசு பள்ளிகளில் பெரும்பாலான கட்டடங்கள், சேதமடைந்து உள்ளன. மழைக் காலங்களில், பள்ளியின் மேற்கூரையிலிருந்து மழைநீர் விழுகிறது. சேதமடைந்த கட்டடத்தில் வைத்து பாடம் நடத்துவதால், அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வீரசோழன் அரசு பள்ளியில் வகுப்பறைக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், மாணவர்களை மரத்தடியில் வைத்து, பாடம் நடத்த வேண்டியுள்ளது. இங்கு ஆறு வகுப்பறைக் கட்டடங்களுக்கு மேல், சேதமடைந்துள்ளது," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்