விளையாட்டு வீரர்கள் உடல் நலனின் அக்கறை செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியும்!
கோவை: தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மண்டல, மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், தேசிய, சர்வதேச அளவிலும் சாதித்து, விளையாட்டிலும் நாங்கள் திறன் பெற்றவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், தங்களின் உடல் நலனின் அக்கறை செலுத்தினால் மட்டும்தான், வரும் காலங்களில், எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் சாதிக்க முடியும். கோவை, ஆர்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய பிசியோதெரபிஸ்ட் கணேசன் கூறியதாவது: விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் வயதுக்கு ஏற்ப பயிற்சிகள் கொடுக்க வேண்டும். பல இடங்களில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, ஒரே மாதிரியான பயிற்சிகள்தான் வழங்கப்படுகின்றன. வார்ம்-அப் என்று சொல்லக் கூடிய முன்கட்ட பயிற்சியில், தாங்கள் எந்த விளையாட்டில் ஈடுபடப் போகிறோம், எந்தெந்த தசைகளுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அதற்கு சில விசேஷ பயிற்சிகள் எடுக்க வேண்டும். இதை, டைனமிக் ஸ்ட்ரெச்சிங் என்று கூறுவர். எல்லா பாகங்களுக்குமான பயிற்சிகளுக்கு, ஆக்டிவ் மூவ்மென்ட் என்று பெயர். இதற்கு பின், இருதயத் துடிப்பை மெல்ல, மெல்ல அதிகரிக்கும் வகையில், சிறிய ஓட்டம் உட்பட பிற விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். முன்கட்ட பயிற்சிகள் மேற்கொள்ளாமல், இலக்கை அடைந்து விடுவேன் என்ற அசட்டையால், மைக்ரோ ட்ரோமோ என்று பெயர் சொல்லக் கூடிய தசைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிலையில், அந்த இடத்தில் உடனடியாக ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம், அடிபட்ட இடத்தில் இருந்து வெளியேறும் ரசாயனம் உடனடியாக கட்டுப்படும். ஒரு சிலர், சில நாட்கள் ஓய்வாக இருந்து விடுவர். அப்போது, வலி குறைந்ததாக தோன்றிய உடன், மீண்டும் விளையாட துவங்குவர். இது, நாளடைவில், விளையாட முடியாத பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். எனவே, சிறிய பாதிப்பு இருந்தாலும், உடனடியாக, விளையாட்டுத் துறை சார்ந்த மருத்துவரிடம் காண்பித்து, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, டாக்டர் கணேசன் கூறினார்.