உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ கவுன்சிலிங் இல்லை
மதுரை: மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவ கவுன்சிலிங் நடக்காது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மதுரை, திருமங்கலம் அச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன், மேலக்கோட்டையை சேர்ந்த மாணவர் முத்துக்குமார் ஆகியோர், மருத்துவப்படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, 2020 - 21ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, விசாரித்தது.விசாரணைநேற்று முன்தினம்(அக்.,14)ல் நடந்த விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் உத்தரவு:அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன், சட்டசபையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்., 16ல் நீட் முடிவு வெளியாக உள்ள நிலையில், சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியாத பட்சத்தில், நடப்பு ஆண்டில், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்.கவர்னரின் செயலரிடம் விபரம் பெற்று, நாளை, 16ம் தேதி தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த மனு இன்று(அக்.,16) விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ கவுன்சிலிங் நடைபெறாது. மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்.,29க்கு ஒத்திவைத்தனர். விசாரணையின் போது, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நீதிபதி கண் கலங்கினார்.