குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சி கிராம சபாவில் உறுதி செய்ய அறிவுறுத்தல்
கோவை: குழந்தை தொழிலாளர்கள் இல்லாத ஊராட்சிகள் உருவாக பாடுபட வேண்டும். இதற்கு கிராம சபா கூட்டங்களில் உறுதியேற்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியிருக்கிறார்.கோவை மாவட்ட வருவாய்த்துறை சார்பில், வ.உ.சி., மைதானத்தில், 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 8:05 மணிக்கு குடியரசு தின விழா கோலாகலமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளதாவது:அன்றைய தினம், மாவட்டத்தில் உள்ள, 228 ஊராட்சிகளிலும், கிராம சபா கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதில், 2024-25ம் நிதியாண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும்.துாய்மை பாரதம் இயக்கத்தில், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் செயல்படுத்தி வந்தால், அதுகுறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் தெரிவித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனை பெற வேண்டும்.ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளை தேர்வு செய்து, ஒப்புதல் பெற வேண்டும். பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அம்மக்கள் வசிக்கும் ஊராட்சிகளில், மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, பட்டியல் தயாரிக்க வேண்டும். இதற்கு கிராம சபா கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு, இன்றைய தினம் வரை வீடு கட்டும் பணி துவங்காமல் இருந்தால், அதைப்பற்றிய விபரங்களை சேகரித்து, ஆவாஸ் தளத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வீடுகளை, 31க்குள் கட்டி முடிக்க பயனாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.சுற்றுலா தலங்களில் மதி அங்காடிகள் அமைக்க, தேர்ந்தெடுத்த மகளிர் குழுக்கள் பட்டியல், சிறுதானிய உணவகங்கள் அமைக்க, தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, கிராம சபா கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.குழந்தைகள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என ஒப்பந்ததாரர்களிடம் சுய சான்று பெறுவதோடு, ஒவ்வொரு ஊராட்சியும் குழந்தை தொழிலாளர்கள் அற்றதாக அறிவிக்கும் வகையில் பாடுபட வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.