இந்தியா மிளகு உற்பத்தியில் முன்னணி: தஞ்சாவூர் வேளாண் கல்லூரி முதல்வர் தகவல்
பெரியகுளம்: உலகளவில் மிளகு உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது என வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வேலாயுதம் பேசினார்.பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையம், கேரளா கோழிக்கோடு பாக்கு மற்றும் வாசனைப் பயிர்கள் மேம்பாட்டு இயக்ககம் சார்பில், விவசாயிகளுக்கான மிளகில் நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி, தோட்டக்கலை கல்லூரியில் நடந்தது.முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்து பேசியதாவது:மிளகில் அதிக மகசூல் பெறுவதற்கு சிறந்த மிளகு ரகங்கள், வீரிய ஒட்டு செடிகளை நடவுக்கு பயன்படுத்த வேண்டும். நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக வருவாய் பெறலாம்.செயற்கை நுண்ணறிவியல் தொழில்நுட்பம் டிரோன் மூலம் பயிர்களில் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எளிதில் செடிகளுக்கு அளிக்க முடியும்., என்றார்.தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வேலாயுதம் பேசியதாவது:இந்தியாவில் மிளகு 1.34 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 66 ஆயிரம் டன்கள் மிளகு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு தேவைகளுக்கு போக, எஞ்சிய மிளகு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.உலக அளவில் இந்தியா மிளகு உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது., என்றார்.நறுமண பொருட்கள் வாரிய உதவி இயக்குனர் செந்தில்குமரன், மிளகு சாகுபடி குறித்த கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பேராசிரியர்கள் ராமர், பிரபு, சுப்பையா, சுகன்யா கன்னா, செண்பகவள்ளி, எஸ்.பி.ஐ., வங்கி மேலாளர் ஜெயசரவணன் பேசினர். தோட்டக்கலை இணைப் பேராசிரியர் பிரபு நன்றி தெரிவித்தார்.