ஒரு பெண் தான் உலகின் முதல் பூசாரி; மானிடவியல் பேராசிரியர் பேச்சு
சென்னை: உலகின் முதல் பூசாரி, ஒரு பெண் தான் என்பதற்கு சிலப்பதிகாரம் சான்றாக உள்ளது என புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் பக்தவச்சல பாரதி பேசினார்.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், செம்மொழி தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.அதில், மானிடவியல் பேராசிரியரும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனருமான பக்தவச்சல பாரதி பேசியதாவது:தமிழ் மரபு என்பதை புரிந்துகொள்ள, மெசபடோமியாவின் வரலாற்றில் இருந்து துவங்க வேண்டும். இங்குள்ள கலாசாரத்தின் தொன்மையையும், சொற்களையும், அங்கிருந்ததை அறிய முடிகிறது.அதேபோல் சிந்துவெளியிலும் இருந்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் ராக்கி கர்ஹியில் வாழ்ந்த மனிதனின் டி.என்.ஏ.,வுடன், தமிழகத்தின் ஆனைமலை பழங்குடியினரின் டி.என்.ஏ., ஒத்துப்போகிறது.தமிழ் சமூகம், துளு மொழி பேசும் மக்கள் நிறைந்த நம் நாட்டின் மேற்கு பகுதியில் துவங்கி, இலங்கையின் மட்டக்களப்பு வரை பரவி இருந்தது.முற்பட்ட திராவிட மொழிகளில் ஒன்றான, கோண்டியிலிருந்து 10 துணை மொழிகளும், தமிழில் இருந்து ஆறு துணை மொழிகளும் தோன்றி உள்ளன. இந்த, அனைத்து மொழி பேசுவோரின் பண்பாட்டிலும், ஒத்தக் கூறுகள் நிறைய உள்ளன.தற்போது பழங்குடியின ஆராய்ச்சி, உலகம் முழுதும் பிரபலமடைந்து உள்ளது. என்றாலும், யூகங்களின் அடிப்படையில் தான் விடை காண முடிகிறது. ஆனால், தமிழில் தான், சங்க இலக்கியங்கள் எனும் மிக முக்கிய பொக்கிஷம் உள்ளது.சங்கம் மருவிய காலமாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பழங்குடியினர் குறித்த நிறைய தகவல்கள் உள்ளன.அதில், கண்ணகியும் கோவலனும், பாலை நிலத்தில் ஒரு சோலையில் ஓய்வெடுக்கும் போது, ஜைன இனப்பெண், கொற்றவைக்கு அலங்காரம் செய்தபடியே, கண்ணகியைப் பார்த்து, இவள் உலகம் போற்றும் தெய்வ நிலையை அடைவாள் எனக் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. இது ஒரு முக்கியமான சான்று.முற்காலத்தில் பூஜை செய்யும் உரிமை, பெண்களுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. அது ஆண்களின் கைகளுக்கு மாறிய போது, ஆண்கள், சேலை கட்டி பூஜை செய்தனர். இப்போதும் பழங்குடியினரிடம் உள்ள தாய்வழி பண்பாடு தான், நம் பண்பாட்டின் தொன்மை. தமிழ் பண்பாட்டின் வேர்களாக சங்க இலக்கியங்கள் உள்ளன. அவற்றில், ஆய்வு செய்தது துளி தான். இவ்வாறு அவர் பேசினார்.