பழங்கால நாணயங்களே நம் வரலாற்றின் சாட்சி: தினமலர் முன்னாள் ஆசிரியருக்கு புகழாரம்
உடுமலை: தினமலர் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் தந்தையுமான மறைந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பழங்கால நாணயங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அவையே, நமது வரலாற்றின் சாட்சியாக உள்ளது என உடுமலையில் நடந்த வரலாற்று ஆய்வு நடுவ நுால் வெளியீட்டு விழாவில், முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், கரை வழி நாடும் நாகரிகமும்&' என்ற கல்வெட்டுகள் மற்றும் கனிம வளங்கள் சார்ந்த இரு நுால்கள் மற்றும் தளி எத்தலப்ப மன்னர் தொடர்பான தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர், என, மூன்று நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசியதாவது:தினமலர் முன்னாள் ஆசிரியர் மற்றும் சங்க கால நாணயவியலின் தந்தை, மறைந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பழங்கால நாணயங்களை ஏராளமாக சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளார்.சங்க இலக்கியங்கள் எப்படியோ, அவ்வாறு பழங்கால நாணயங்கள் வாயிலாக, வரலாற்றை நமக்கு வழங்கியுள்ளார். கொங்கு நாட்டில் குறிப்பாக, தென் கொங்கு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாணயங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்.அமராவதி கரைவழி பகுதிகளிலுள்ள, வட பூதனம், கடத்துார், கண்ணாடிபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ரோமானிய நாணயங்கள் உட்பட, ஏராளமான பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதனை, அவர் ஆவணப்படுத்தியுள்ளார். அந்த நாணயங்களே, கரை வழி நாகரிகம், வரலாற்றின் சாட்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.ஓய்வு பெற்ற இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி பேசுகையில், அமராவதி கரைவழி நாகரிகம், கரைவழியில் இருக்கும் பெருவழிகள், கரை வழியில் இருக்கும் வளங்கள், பொருந்தல் நாகரிகம், கொடுமணல் நாகரிகம் ஆகியவை, இந்த கரை வழிநாட்டுக்கு சொந்தமானது என்றார்.