உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் உயரும் மாணவர் சேர்க்கை கணக்கு காட்ட என்கின்றனர் ஆசிரியர்கள்

திருப்பூர்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிய, 12 நாட்களில், ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது, கணக்கு காண்பிக்கும் வகையில் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை தான் என, ஆசிரியர்களே ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில், 38,000 அரசு பள்ளிகள், 8,000 உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.கோடை விடுமுறைக்கு முன்னரே, பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவச கல்வி, ஸ்மார்ட் கிளாஸ், ஆய்வகம், காலை, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளை விளக்கி, மாணவ - மாணவியரை சேர்ப்பதில், ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த முதல் தேதி மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், 12ம் தேதி வரை மாநிலம் முழுக்க, ஒரு லட்சத்தை தாண்டி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:நாங்கள், வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டுகிறோம். பெரும்பாலான நகர்ப்புறங்களில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கடினமானதாகவே உள்ளது.அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள், தற்போது தனியார் பள்ளிகளில் யு.கே.ஜி., படிக்கும் மாணவ - மாணவியரின் விபரத்தை சேகரித்து, மாணவர் சேர்க்கை பட்டியலில் சேர்த்து கணக்கு காண்பித்து வருகின்றனர்.அத்தகைய மாணவர்கள், அரசு பள்ளில் சேர்ந்து பயில்வர் என, சொல்ல முடியாது. அதே நேரம், நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் பெற்றோர் பலர், மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அத்தகைய பள்ளிகளில், தற்போதைய நிலையிலேயே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் இல்லை.ஆசிரியர்கள் பற்றாக்குறை, பெற்றோரிடம் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல பள்ளிகளில் கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்புகள், பெற்றோரை திருப்திப்படுத்தும் வகையில் இல்லை; இதுவும், மாணவர் சேர்க்கையை பாதிக்கும்.இதுபோன்ற விஷயங்களை, அரசு கவனத்தில் எடுத்து செயல்பட்டால், மாணவர் சேர்க்கையை தக்க வைக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நீலகிரி கடைசி இடம்கடந்த, 12 நாள் நடந்த மாணவர் சேர்க்கையில், ஒரு லட்சத்து 1,443 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 10,946 மாணவ - மாணவியர் இணைந்துள்ளனர். அதற்கடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8,803 பேர்; சேலம் மாவட்டத்தில், 8,774 பேர் இணைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், 2,003 பேர்; திருப்பூர் மாவட்டத்தில், 2,582 பேர் இணைந்துள்ளனர். மாணவர் சேர்க்கையின் கடைசி இடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெற்றுள்ளது; இம்மாவட்டத்தில், 348 பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்