ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சி: நிப்ட்-டீ கல்லூரி நிர்வாகம் அழைப்பு
திருப்பூர்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம், முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரி சார்பில், வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடக்க உள்ளது.திருப்பூரில் மட்டும், 8,500 குறு, சிறு மற்றும் நடுத்தர ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும், எட்டு லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பனியன் தொழில் வளர்ச்சிக்கு, ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது.வரும் ஆண்டுகளில், தொழிலாளர் தேவை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, திருப்பூரில் மட்டும் இருந்து வரும் பனியன் தொழில், பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது; இதனால், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் தேவையும் அதிகரித்துள்ளது.பயிற்சி பெற்ற தொழிலாளரை உருவாக்கும் நோக்கத்துடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், நிப்ட்-டீ கல்லுாரி வாயிலாக சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற சேவை நோக்கில், மாநில அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் பங்களிப்போடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக, 18 வயதில் இருந்து 35 வயதிற்கு உட்பட்ட, இளைஞர்களுக்கு ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆடை வடிவமைப்புத்துறையில், உதவி பேஷன் டிசைனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பிளஸ் 2 படித்தவர்கள், இப்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம். இந்தாண்டு, 120 நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்குமிடம், உணவு, பாடப்புத்தகம் இலவசமாக பெற்று, திறன் பயிற்சியுடன், தையல் கலை பயிற்சி, பேட்டர்ன் மேக்கிங், கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கில கல்வி, மென்திறன் பயிற்சி ஆகிய பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படும்.அரசின், பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுவதால், பயிற்சிக்கு பின், 12 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்துடன், வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், 80563 23111, 87546 23111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.