பள்ளி பஸ் டிரைவர், உதவியாளர் விவரம் எமிஸ் தளத்தில் பதிவிட உத்தரவு
திருப்பூர்: தனியார் பள்ளி பஸ்களை இயக்கும் டிரைவர், நடத்துனர் அல்லது உதவியாளர் விவரங்களை 'எமிஸ்' தளத்தில் சேர்க்க, பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை (தனியார் பள்ளிகள் இயக்ககம்) சார்பில், பள்ளி வாகனங்கள் தொடர்பான நடப்பாண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 32 விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.அதில் கூறியிருப்பதாவது: பள்ளி வாகனங்களில் நடத்துனர்களால், மாணவியருக்கு தொல்லை வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகிறது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்க வேண்டும். ஒரு மாத காலத்துக்குள் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் உதவியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமை குறித்து பயிற்சியளித்திட வேண்டும்.மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி மற்றும் 'போக்சோ' சட்டத்தின் சாராம்சம் குறித்து, தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பள்ளி பஸ் டிரைவர், உதவியாளர் தினமும் சுவாச சோதனை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்தி, பதிவுகள் ஆறு மாதங்களுக்கு பராமரிக்க வேண்டும்.அதன்பின், போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவசர காலம், அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள அவசர கால பட்டன் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். பள்ளி வாகனங்கள், டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் பள்ளி நிர்வாகங்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.மாவட்ட அளவில் இப்பணிகளை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கண்காணித்து, உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். கல்வியாண்டு துவங்கி, பள்ளி திறப்புக்கு முன் இப்பணிகளை முடிக்க வேண்டும்.இவ்வாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.