ஆர்.டி.இ., விதிப்படி மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்த வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு
கோவை: அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி,(ஆர்.டி.இ.,) மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஒரு கிலோமீட்டருக்கும், ஒரு அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காமல், தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடுகின்றனர். தங்கள் சொந்த விருப்பத்தின்பேரில், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர், அவர்களது செலவிலேயே சேர்த்துக் கொள்வதில், எந்தத் தடையும் இல்லை.ஆனால், இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு கட்டணம் செலுத்தாது என்பதை அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். எந்தப் பகுதிகளில் நேரடியாக அரசே, கல்வி தரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளதோ, அந்தப் பகுதிகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தையின் கல்வி உரிமையை அரசு பாதுகாக்கும்.அதேபோல, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவு மக்கள், தனியார் பள்ளிகளில் சேர விரும்பும்போது, தனியார் பள்ளிகள் பாகுபாடு காட்டாமல், அனைத்துப் பிரிவினரையும் சேர்க்க வேண்டும்.ஆர்.டி.இ., விதிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்துவதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆர்.டி.இ.,இலவச கல்விக்கு ஒதுக்கும் முழு தொகையையும், அரசுப் பள்ளிகளில் செலவிடும்போது, அங்கு தரமான கல்வி வழங்க முடியும்.எனவே, இந்த கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளையும் அருகாமைப் பள்ளிகளாக அறிவித்து, அனைத்துக் குழந்தைகளும் சமமான கற்றல் வாய்ப்பு பெறும் வகையில், மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.