பாலியல் புகாரில் கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய கோரி மாணவியர் மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டை அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் கடந்த 1ம் தேதி ஆய்வு செய்ய வந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழியிடம், கணித ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோர் மாணவியரை பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் கூறப்பட்டது.இதை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை, கலெக்டர் மூலம் சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது.இதையடுத்து, இரு ஆசிரியர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினி கொடுத்த புகாரின்படி, பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து, போக்சோ'வில் இரு ஆசிரியர்களையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று காலை செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 500க்கும் மேற்பட்டோர், சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'இரு ஆசிரியர்கள் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்தனர்.மாணவியரிடம், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், தாசில்தார் வாசுதேவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஆவடி துணை ஆணையர் அய்மன்ஜமால், பூந்தமல்லி உதவி ஆணையர் தனசெல்வம், ஆவடி கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் பேச்சு நடத்தினர்.கலெக்டர், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மாணவியர் கலைந்து சென்றனர்.