இலவச ஷூக்களை எடுப்பதற்காக எம்புட்டு துாரம்.. : பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்பல்
மதுரை: மதுரைக் கல்வி மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான வழங்க வேண்டிய இலவச ஷூ, சாக்ஸ்களை எடுக்க உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டுமா. அதற்கான வாகன செலவை யார் ஏற்பது என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.மதுரை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, உதவிபெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் வழங்க வேண்டிய நலத்திட்டங்களில் ஒன்றான ஷூ, சாக்ஸ் உசிலம்பட்டியில் முன்னாள் டி.இ.ஓ., அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஜூலை 30க்குள் உசிலம்பட்டிக்கு சென்று மாணவர்களுக்கான ஷூ, சாக்ஸ்களை பெற்று வினியோகிக்க வேண்டும் என டி.இ.ஓ., சாயிசுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதுவரை அனைத்து ஒன்றியங்களுக்கும் மையமாக இருந்த திருமங்கலத்தில் இருந்து தான் இவை வினியோகிக்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு ஏன் உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது என தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: மதுரைக் கல்வி மாவட்டம் என்பது மதுரை நகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி என கல்வி ஒன்றியங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள பள்ளிகளுக்கு பல ஆண்டுகளாக அரசு நலத்திட்டங்கள் திருமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் வைத்து தான் பள்ளிகள் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இந்தாண்டு உசிலம்பட்டியில் ஷூ, சாக்ஸ்களை அதிகாரிகள் இறக்கி வைத்துள்ளனர். மதுரையில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உசிலம்பட்டி உள்ளது. ஷூ, சாக்ஸ் எடுக்க வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான செலவை தலைமையாசிரியர் ஏற்க சொல்கிறார்கள். உசிலம்பட்டிக்கு செல்ல அதிக செலவு ஏற்படும். எனவே அனைத்து ஒன்றியங்களுக்கும் மையமாக உள்ள திருமங்கலத்திற்கே ஷூ, சாக்ஸ் இருப்பு வைக்க வேண்டிய மையத்தை மாற்ற வேண்டும் என்றனர்.