உள்ளூர் செய்திகள்

இனி மாதத்தில் நான்கு நாட்கள் புத்தக மூட்டை சுமக்க வேண்டாம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாதந்தோறும் நான்கு நாட்களை புத்தகப் பையில்லா நாட்களை அமல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.பள்ளி செல்லும் மாணவர்கள், ஏராளமான புத்தகங்களை எடுத்துச் செல்வதால் அதிக சுமை மற்றும் மன அழுத்தத்துடன் இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தங்கள் கல்வியாண்டில் 10 நாட்கள் பையில்லாமல் சென்று வகுப்புகளில் பங்கேற்க 2020ம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்தது.புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டத்திலும், இந்த முறை பரிந்துரைக்கப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் பையில்லா நாட்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவிலும் பள்ளிகளில் பையில்லா நாட்களை செயல்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி கூறியதாவது:கேரள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தகப் பைகள் அதிக எடையுடன் இருப்பதாக பெற்றோர் மற்றும் சமூக நல அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.இதை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் இரண்டு பகுதிகளாக பிரித்து அச்சிடப்பட்டன.இருப்பினும், பள்ளி பைகள் அதிக எடையுடன் இருப்பதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் பள்ளி பைகளின் எடை 1.6 - 2.2 கிலோ வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளின் எடை 2.5 - 4.5 கிலோ வரையிலும் பராமரிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.மாதந்தோறும் நான்கு நாட்கள் பையில்லா நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் புத்தகப் பையை எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை. அந்த நாட்களில், நன்னெறி வகுப்புகள் மற்றும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்