ஓவிய ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு; முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
தொண்டாமுத்துார்: ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கட்டாய ஓய்வு வழங்கி, முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உத்தரவிட்டுள்ளார்.ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், கலை ஆசிரியராக ராஜ்குமார் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கட்டாய பணி ஓய்வு வழங்கி, சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.சி.இ.ஓ., பாலமுரளி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஓவிய ஆசிரியர் ராஜ்குமார், தனது அடிப்படைப் பணியான மாணவர்களுக்கு ஓவியம் கற்பித்தல் பணியை புறக்கணித்துள்ளார்.பொய்யான காரணங்களை தெரிவித்து விடுப்பு எடுத்து, தலைமை ஆசிரியர் மீது கலெக்டரின் மக்கள் குறை தீர்ப்பு முகாமில், சிறுமையான குற்றச்சாட்டுகளை காழ்ப்புணர்வோடு தெரிவித்துள்ளார்.அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக, பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.போலியான கலை ஆசிரியர் நலச்சங்கம் என்ற பெயரில், அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டார். கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் பெற்ற கடனை திருப்ப செலுத்தவில்லை. நிர்வாக நலனுக்கு எதிராக அவதூறு பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டது நிரூபணமானதால், தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 8(6)ன் படி, கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.