உள்ளூர் செய்திகள்

இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்.எல்.சி., சேர்மன் பேச்சு

நெய்வேலி : மாணவர்கள், உலகளாவிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்து, இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.சென்னை, அண்ணா பல்கலையில் விவேகானந்தா கலையரங்கத்தில் நடந்த உறுப்பு கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி பேசியதாவது:நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு அவசியமான, உலகளாவிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும். வேகமாக மாறிவரும் உலகில், சவால்களை சமாளிக்கவும், அவற்றை வாய்ப்புகளாக மாற்றவும், மாணவர்கள் தங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்த வேண்டும்.பொறியாளர்கள், பிரச்னைகளைத் தீர்ப்பவர்கள் மற்றும் புதுமையை உருவாக்குபவர்கள் என்பது நிதர்சனமான உண்மை. எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த, நிலையான வளமான மண்ணாக இந்த பூமியை உறுதி செய்யும் பொறுப்பு பொறியாளர்களுக்கு உள்ளது.பொறியியல் துறை என்பது, கருத்துக்களை நிஜமாக்குவது மட்டுமல்ல. கற்பனைக்கும் அதை செயல்படுத்துவதற்குமான இடைவெளியைக் குறைப்பது பற்றியதாகும்.ஒரு காலத்தில், அனல் மின் நிலையங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட மின் துறை, இப்போது விரைவாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கிறது. சிறப்பு மாற்றுகளாகக் கருதப்பட்ட காற்று மற்றும் சூரிய சக்தி தற்போது பிரதான நீரோட்டம் ஆகிவிட்டன.இந்தியா இன்று, உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக, வாய்ப்புகள் மற்றும் புதுமைகளின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. நமது மண்ணில் இருந்து வெளிப்படும் திறமையை, உலக அரங்கம் அங்கீகரித்து மதித்து வருகிறது.இவ்வாறு என்.எல்.சி., சேர்மன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்