அரசு பள்ளி மாணவர் சேர்க்கை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 2025- 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று துவங்கியது.சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரம்பரியம் மிக்க நுாற்றாண்டு கடந்த லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார். இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 550 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் கண்ணப்பன், பழனிசாமி, நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.