உள்ளூர் செய்திகள்

சம வேலைக்கு சம ஊதியம் மறுப்பு; தமிழக அரசுக்கு நர்ஸ்கள் எதிர்ப்பு

சென்னை: சம வேலைக்கு, சம ஊதியம் என்ற உத்தரவை அமல்படுத்தாமல், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு, நர்ஸ்கள் எதிர்ப்பு தெரிவித்துள்னர்.இதுகுறித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கை:நர்ஸ்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இட ஒதுக்கீடு அடிப்படையில், 2015ல் நர்ஸ்கள் பணியமர்த்தப்பட்டனர். மாதம், 7,700 ரூபாய் ஊதியத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், தொகுப்பூதிய முறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான நர்ஸ்கள் மட்டுமே தொகுப்பூதிய முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுதொடர் பாக, 2018ல் சென்னை உயர் நீதிமன்றம், நிரந்தர நர்ஸ்களுக்கு இணையான பணி செய்யும் தொகுப்பூதிய நர்ஸ்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது.இதை அரசு நிறைவேற்றாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, 2019ல் தொடர்ந்தோம். அப்போது, நர்ஸ்கள் பணி குறித்து ஆராய குழு அமைத்து, அக்குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றதால், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நர்ஸ் களின் பணியின் தன்மை ஆராயப்பட்டது. அந்த அறிக்கையின்படி, மூன்று மாதத்தில் நிரந்தர நர்ஸ்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அனைத்து பணி பலன்களையும் வழங்க, நீதி மன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது முழுக்க முழுக்க சமூக நீதிக்கு எதிரானது. தேர்தல் வாக்குறுதியில், தொகுப்பூதிய நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்வோம் எனக் கூறிவிட்டு, அதற்கு நேர் மறையாக செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது.எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்