உள்ளூர் செய்திகள்

கூகுள், ஏ.ஐ.,யை மட்டும் நம்பியிருக்க கூடாது மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ''தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கும் தலைமுறையாக மாணவர்கள் மாறி விடக் கூடாது. எதுவாக இருந்தாலும், கூகுள், ஏ.ஐ.,யிடம் கேட்கலாம் என்ற மெத்தனம் கூடாது,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.பள்ளி கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,715 ஆசிரியர் களுக்கு, நுழைவு நிலை பயிற்சியை துவக்கி வைக்கும் வகையில், பயிற்சி கையேட்டை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.பொறுப்புணர்வு துறை சார்பில், 94 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 59 புதிய பள்ளி கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.மேலும், 277 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள 243 புதிய பள்ளி கட்டடங்கள் மற்றும் பாரத சாரண - சாரணியர் தலைமை அலுவலக கட்டடத்திற்கு, அவர் அடிக்கல் நாட்டினார்.பின், முதல்வர் பேசியதாவது:ஆசிரியர்கள் ஒவ்வொரு முறை வகுப்பறைக்குள் நுழையும் போதும், உங்கள் முன் இருப்பவர்கள் மாணவர்கள் மட்டுமின்றி, எதிர்கால டாக்டர், இன்ஜினியர் மற்றும் அரசியல் தலைவர்கள் என்பதை உணர வேண்டும். அவர்களுக்கு கற்பிக்கும் பொறுப்புணர்வு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும்.இன்றைய காலத்தில் பாடம் எடுப்பது, ஆசிரியர்களுக்கு எளிது. நாம் படித்த காலத்தில் மெனக்கெட்டு கல்வி கற்க வேண்டி இருந்தது. இன்று அறிவியல், வரலாறு, கணிதம் என, அனைத்து பாடங்களையும் எளிதாக கற்பிக்கும் வாய்ப்புகள் உருவாகி விட்டன.இருப்பினும் இவை அனைத்தும் தகவல்கள் தான் என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்று எந்த அளவிற்கு அறிவு சார்ந்த தகவல் இருக்கிறதோ, அதற்கு இணையாக தேவையற்ற குப்பையும் உள்ளது.நாம் தான் மாணவர் களுக்கு சரியான அடையாளம் காட்ட வேண்டும். 'டெக்னாலஜி'யை மட்டுமே நம்பி இருக்கும் தலைமுறையாக, மாணவர்கள் மாறிவிடக் கூடாது.எதுவாக இருந்தாலும், கூகுள், ஏ.ஐ.,யிடம் கேட்கலாம் என்ற மெத்தனம் அவர்களுக்கு வரக் கூடாது. தொழில்நுட்பத்திற்கும், மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை மாணவர் களுக்கு உணர்த்த வேண்டும் .மாற்றி அமைக்கும் பாடப் புத்தகம் கடந்து, இலக்கியம், பொது அறிவு, சமூக ஒழுக்கம் என, அனைத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். 'யு டியூப்' சேனல்களில் சில ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு, இக்கட்டான சூழ்நிலையை கையாளுவது குறித்து சொல்லித் தருவதுபோல், ஆசிரியர்களான நீங்களும் புது முயற்சி எடுக்கலாம்; உங்களது முயற்சி, ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.மாணவரின் வாழ்க்கை மாற்றத்திற்கு, ஆசிரியர்கள் தான் காரணம் என சொல்வது, ஆசிரியர்களுக்கான பெரிய விருது. மாணவர்களுக்கு எந்த அளவிற்கு அறிவாற்றல் முக்கியமோ, அந்த அளவிற்கு உடல் நலம், மனநலம் முக்கியம்.அனைவரின் வீட்டிலும் ஒரே மாதிரியான சூழல் இருக்காது. அதனால், அனைவரையும் ஒரே அளவுகோல், முன்முடிவோடு ஆசிரியர்கள் அணுகக் கூடாது. கல்வி பணியை கடந்து, மாணவர்கள் இடையேயுள்ள ஜாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல், நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், கணேசன், மேயர் பிரியா பங்கேற்றனர். தமிழில் சதம் அடித்தால் ரூ.10,000 பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது: முதல்வர் எங்களுக்கு வழங்கும் இலக்கை தாண்டி உழைத்து வருகிறோம். அதற்கு இவ்விழா ஒரு சான்று. முதல்வரின் இதயத்திற்கு நெருக்கமான தமிழ் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உள்ளோம். இன்னும் ஆறு மாதத்தில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வந்து விடும். அதேபோல், எங்களுக்கும் ஆறு மாதத்தில் பொதுத் தேர்தல் வந்து விடும். அதில் நீங்களும் வெற்றி பெற வேண்டும்; நாங்களும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்