ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில், வெற்றி பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடந்த ஜே.இ.இ., நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பில் படித்த மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் ஆகியோர் பயிற்சி சான்றிதழ் வழங்கி பேசியதாவது:ஜே.இ.இ., பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வழங்கும் வகையில் மாதிரி பள்ளிகள் போன்று மாவட்டம், வட்டாரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வெற்றிப்பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மையப் பள்ளியாக கொண்டு சுற்று வட்டாரங்களிலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள், சனிக்கிழமை தோறும் வரவழைக்கப்பட்டு ஜே.இ.இ., பயிற்சி வழங்கப்பட்டது.இதுவரை 212 வட்டாரங்களில் 272 பள்ளிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 21ம் தேதி ஜே.இ.இ., நுழைவு தேர்வு நடக்கவுள்ளது. முயற்சி மட்டுமே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும். தொடர் முயற்சி மற்றும் அதற்கான உழைப்பினை செலுத்தினால் நமது நோக்கத்தினை எளிதாக பெறமுடியும்.இவ்வகுப்பில் வழங்கப்பட்டுள்ள பயிற்சிகளை சரி வர பயன்படுத்தி மாணவர்கள் தொடர்முயற்சி செய்து வெற்றி இலக்கினை அடைய வேண்டும் என கூறினர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், கல்வி அலுவலர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.