உள்ளூர் செய்திகள்

உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவு எப்போது வெளியிடும் டி.ஆர்.பி.,? 5 பாடங்களுக்கு மட்டும் பணி நியமனமா?

மதுரை: அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக டி.ஆர்.பி., நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் முழுமையாக வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே 5 பாடங்களுக்கு மட்டும் முடிவு வெளியிட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த டிசம்பரில் நடந்தது. இதில் 48 பாடப் பிரிவுகளை சேர்ந்த 42,064 தேர்வர்கள் பங்கேற்றனர். ஆனால் முழுமையான முடிவுகள் அறிவிக்கப் படவில்லை.இதற்கிடையே வரலாற்று கல்வி, மனித உரிமைகள், இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா, கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 5 பாடங்களுக்கான தேர்வு முடிவு முதற்கட்டமாக வெளியிடப்பட்டது. இவர்களுக்கு மார்ச்சில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடத்தி 5 பேருக்கு மட்டும் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 43 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.இது குறித்து தேர்வர்கள் கூறியதாவது:இத்தேர்வை 48 பாடங்களை சேர்ந்த தேர்வர்கள் எழுதியுள்ளோம். ஆனால் ஒரு போட்டித் தேர்வில் முதன்முறையாக குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் முடிவுகள் வெளியிட்டு, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் குறிப்பிட்ட பாடங்களுக்கு தேவை ஏற்பட்டதால் முடிவு வெளியிட்டதாக தெரிவிக்கின்றனர்.தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 43 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்கல்வி அமைச்சர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்