யு.ஜி.சி., கால அவகாசத்தால் கல்லூரி ஆசிரியர் சம்பள உயர்வு தாமதம்
புதுடில்லி: கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு தொடர்பாக பரிந்துரைக்க வேண்டிய பல்கலைக்கழக மானிய கமிஷன் (யு.ஜி.சி.,) அவகாசம் கேட்பதால், பரிந்துரை வர தாமதம் ஆகும் என்று தெரிகிறது. கல்லூரி ஆசிரியர் சம்பள உயர்வு தொடர்பாக, யு.ஜி.சி., ஒரு உயர் குழுவை அமைத்து, ஆராய்ந்து வருகிறது. இது தன் அறிக்கையை இந்த மாதம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க இருந்தது. ஆனால், இன்னும் அவகாசம் தேவை என்று கோரியுள்ளது. இதை பரிசீலித்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், கால அவகாசம் தந்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தாமதத்தால் தங்களுக்கு சிக்கல் ஏற்படும்; ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால், தற்காலிக பரிந்துரையை அடுத்த மாதத்துக்குள் வெளியிட முடியுமா என்று அரசு தீவிரமாக உள்ளது. கமிட்டிக்கு அவகாசத்தை நீட்டிக்க அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும், அக்டோபருக்குள் அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கட்டளையுடன், அவகாசத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.