எம்.இ., தேர்வு எழுதியும் ஆப்சென்ட்: அண்ணா பல்கலை மாணவர்கள் அதிர்ச்சி
இப்பல்கலையில், எம்.இ., பவர் மேனேஜ்மென்ட், இஇஇ, மெக்கானிக்கல் இன்ஜி., பிரிவு மாணவர்களுக்கான 5வது பருவத் தேர்வுகள் 10.11.2012 ல் நடந்தது. மதுரையில், "ரெகுலர்" மற்றும் பகுதி நேரமாக படித்த 150 மாணவர்கள் தேர்வைஎழுதினர். அப்போது, வினாத்தாள் கிடைக்க தாமதம் ஏற்பட்டது. பின், சென்னையில் இருந்து ஒரு வினாத்தாளை "மெயில்" மூலம் பெற்று, அதை "ஜெராக்ஸ்" எடுத்து வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தேர்வு நடந்தது. 2013, ஜனவரியில் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த மதுரை உட்பட வெளிமாவட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கான சான்றில், "கிரேடு" என்ற காலத்தில் ("எஸ்&', "ஏ&', "பி&', "சி&', என்று இருக்க வேண்டும்) "யு.ஏ." (ஆப்சென்ட்) என்றும், "ரிசல்ட்&' என்ற காலத்தில் "மீண்டும் தேர்வு எழுத வேண்டும்" (ஆர்.ஏ.- ரீ-அப்பியர்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:மிகவும் கஷ்டப்பட்டு, கனவுடன் நாங்கள் எம்.இ., படிக்கிறோம். அண்ணா பல்கலையுடன், மையங்களை ஒன்றிணைத்தது முதல், நிர்வாக ரீதியாகவே பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதுவரை எழுதிய 4 செமஸ்டர்களுக்கான மதிப்பெண் பட்டியல், இதுவரை வழங்கப்படவில்லை. மின்தடை நேரத்திலும், கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுதினாலும், எங்களுக்கு "ஆப்சென்ட்" போட்டு "கிரேடு" பட்டியல் வெளியாகி இருப்பது வேதனையளிக்கிறது. இதுபோன்ற குளறுபடிகள், இனிமேல் ஏற்படாமல், பல்கலை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.