படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு
திருப்பூர்: திருப்பூர் கோர்ட் ஜாமின் அனுமதித்தும், சட்டக்கல்லூரியில் படிக்கும் தன் மகனுக்கு பிணையம் தர, தந்தை மறுத்ததால் மகனுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் எட்டு பேரின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று பேர் மனு 24ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஐந்து பேருக்கு, தலா இரு நபர் பிணையத்தின் பேரில் ஜாமின் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஜே.எம்., எண் 1 கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், திருப்பூர், புஷ்பா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார், 19, என்ற மாணவனின் தந்தை சுப்ரமணியம், தன் மகனுக்கு பிணையம் அளிக்க மறுத்தார். "என்னை தவிர வேறு யாருடைய பிணையத்தின் பேரிலும் அவரை ஜாமினில் விடுவிக்கக் கூடாது" எனவும், தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமாரின் காவல், மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கோர்ட் ஜாமின் உத்தரவு அளித்தும் மகனை ஜாமினில் வெளியே அழைத்து வர விரும்பாத தந்தையின் செயல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.