உள்ளூர் செய்திகள்

உலக கடற்கரை தூய்மை தினம்: கடற்கரையை சுத்தம் செய்த மாணவர்கள்

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கப்பற் படை முகாம் வீரர்களும், பள்ளி மாணவர்களும் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். செப்டம்பர் 21ம் தேதி ஆண்டுதோறும் கப்பற்படை சார்பில் உலக கடற்கரை தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சித்தர்கட்டம் அருகில் உள்ள கடற்கரை பகுதியில் கோடியக்கரை கப்பற்படை முகாம் கமாண்டர் நிஜாரோ தலைமை வகித்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தார். இதில், முகாம் அதிகாரி ஏ.கே.சிங், நேவி போலீஸ் பிரமோத்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் தங்கதுரை, கப்பற்படை முகாம் வீரர்கள் 15 பேரும் மாணவர்கள் 85 பேரும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுப்பொருட்கள் போன்ற குப்பைகளை பிளாஸ்டிக் பைகள் மூலம் அகற்றி கடற்கரையை தூய்மை செய்தனர். வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை பகுதியிலும் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து கப்பற்படை முகாம் அதிகாரி நிஜாரே கூறியதாவது: "ஆண்டுதோறும் கப்பற்படை சார்பில் தொண்டி முதல் காரைக்கால் பகுதி வரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி செய்யப்பட்டு வருகிறது. இதில், ஆண்களையும், பெண்களையும் ஈடுபடுத்தாமல், எதிர்காலமாக வரும் மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்தினால், சம்மந்தப்பட்ட பகுதியை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.  அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுக்காக இந்த பணியில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளோம். இந்தப்பணியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வனத்துறையினர், கடற்கரை போலீஸார், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்." இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்