மாணவர்கள் விஞ்ஞானிகளாக உயர்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்: என்.எல்.சி., சேர்மன்
நெய்வேலி: "நெய்வேலி மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் பயில அதிக அளவில் தேர்வு பெறுவதுபோல விஞ்ஞானிகளாக உயர்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என என்.எல்.சி., சேர்மன் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில் தேசிய அறிவியல் தின விழா நெய்வேலியில் கொண்டாடப்பட்டது. கிளைச் செயலர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தாமோதரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராஜன், என்.எல்.சி., சேர்மனின் ஆலோசகர் ஸ்ரீராம் மற்றும் சமம் இயக்க துணைச் செயலர் ராணி முன்னிலை வகித்தனர். ரவீந்திரன் வரவேற்றார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி என்.எல்.சி.,சேர்மன் சுரேந்தர் மோகன் பேசியதாவது: நெய்வேலி மாணவ, மாணவிகள், சமீப ஆண்டுகளாக ஐ.ஐ.டி.,யில் பயில அதிக அளவில் தேர்வு பெற்று வருகின்றனர். அதேப்போன்று, விஞ்ஞானிகளாக உயர்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் நிறைந்த நெய்வேலியில் பெருமளவிலான மாணவ, மாணவிகள் ஆராய்ச்சித் துறையில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு என்.எல்.சி., தயாராக உள்ளது. இந்த அரிய வாய்ப்பை மாணவ சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், என்.எல்.சி., கல்வித் துறையுடன் அறிவியல் இயக்கமும் இணைந்து ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை ஊக்குவித்து தேசத்தின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்திட வேண்டும். இவ்வாறு சேர்மன் சுரேந்தர் மோகன் பேசினார். நிகழ்ச்சியில் ஓசூரைச் நேர்ந்த இளம் விஞ்ஞானி சேது, நெய்வேலி அறிவியல் இயக்க நிர்வாகிகள் ராஜகோபால், ஜவகர், சாந்தி செல்வராஜ், முருகன், சின்னப்பராஜ், விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.