போதிய கட்டட வசதி இல்லை; மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள்
அரூர்: கம்பைநல்லூர் அருகே உயர்நிலைப்பள்ளிக்கு போதிய கட்டட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவல நிலை உள்ளது. தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ளது கே.ஈச்சம்பாடி. இங்குள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், 222 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இங்கு போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் சூழ்நிலை உள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் பள்ளியில் இல்லாததால், மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக வெளியில் செல்லும் நிலை உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் பள்ளிக்குள் அடிக்கடி வலம் வருகின்றன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கே.ஈச்சம்பாடி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.