தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி சட்ட பல்கலை பதில் தர உத்தரவு
சென்னை: தேசிய சட்ட பல்கலையில் சேருவதற்கான, தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி நடந்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, தேசிய சட்ட பல்கலை கூட்டமைப்புக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூரை சேர்ந்த, பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு:என் மகள் சத்யஸ்ரீ, தேசிய சட்ட பல்கலையில் சேருவதற்கான தேர்வை எழுதினார். அக்., 5ல் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. என் மகள், 67.50 மதிப்பெண் பெற்றார். மதிப்பெண் பட்டியலை வைத்துள்ளோம். விடைத்தாளிலும், அதே மதிப்பெண் இருந்தது. கவுன்சிலிங்குக்கு என் மகள் அழைக்கப்படவில்லை. அவரை விட குறைவாக மதிப்பெண் பெற்றவருக்கு இடம் கிடைத்தது.இது குறித்து, பெங்களூருவில் உள்ள தேசிய சட்ட பல்கலை கூட்டமைப்பில் விசாரித்தோம். ஏற்கனவே கவுன்சிலிங் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால், அது தான் இறுதியானது என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் மதிப்பெண் பட்டியலை சரிபார்த்த போது, என் மகளின் மதிப்பெண், 67.50 என இருந்ததை, 22.75 என, மாற்றியிருந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, விடைத்தாளை பதிவிறக்கம் செய்து பார்த்த போது, அதிலும், 22.75 என, மாற்றம் செய்துள்ளனர். மதிப்பெண் மாற்றப்பட்டது குறித்து கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே, ஏற்கனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேசிய சட்ட பல்கலையில், என் மகளுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜேசுபாலன்ராஜா ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, தேசிய சட்ட பல்கலை கூட்டமைப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நவ., ௫க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.