மாநில கற்றல் அடைவு தேர்வு எழுத மாணவர்களை தயார்ப்படுத்த உத்தரவு
கோவை: மாநில கற்றல் அடைவுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதோடு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், கொரோனா தொற்றுக்குப் பின், மாநில வாரியாக கல்வித்தரம் மேம்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க, சர்வே எடுக்கும் வகையில், கற்றல் அடைவுத்தேர்வு, வரும் 3ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் மூன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு, இத்தேர்வை எதிர்கொள்வர்.கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், 1,022 பள்ளிகளில் இருந்து, மூன்றாம் வகுப்பில் 8 ஆயிரத்து 805 மாணவர்கள், ஆறாம் வகுப்பில் 9 ஆயிரத்து 270 பேர் மற்றும் ஒன்பதாம் வகுப்பில் 10 ஆயிரத்து 446 மாணவர்கள் என, 28 ஆயிரத்து 521 பேர் இத்தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு, 1,125 கல்லுாரி மாணவர்களை கொண்டு, தேர்வு நடத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ராஜா கூறுகையில், அரசுப்பள்ளிகள் மட்டுமல்லாமல், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளி மாணவர்களும், கற்றல் அடைவு சர்வே தேர்வில் பங்கேற்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், தேர்வு பணிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்றார்.