அரசு விடுமுறை பட்டியல் வெளியாவதில் தாமதம் காலண்டர் தயாரிப்போர் அதிருப்தி
சென்னை: அரசு பொது விடுமுறை அறிவிப்பை வெளியிடாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவது, காலண்டர் தயாரிப்பு பணியில் இருப்போரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில், அடுத்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் குறித்த அரசாணை, அரசால் வெளியிடப்படும். இந்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை, கடந்த ஆண்டு அக்.,11ல் வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு, நவ., 2ல், அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு வெளியானது.காலண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்கள், அக்டோபரிலேயே, காலண்டர் அச்சிடும் பணிகளை துவக்குவர். அதற்கு அரசு விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டியது அவசியம்.வழக்கம்போல், இந்த ஆண்டும் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள், 2024ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களுக்காக காத்திருக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் நேற்று வரை, அரசு பொது விடுமுறை நாட்கள் விபரம் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, பொதுத்துறை ஊழியர்களை கேட்டபோது, 2024ம் ஆண்டு அரசு பொது விடுமுறை அறிவிப்பு அரசாணைக்கான கோப்பு, அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அரசு ஒப்புதல் கிடைத்ததும் வெளியிடப்படும்&' என, ஒரு வாரமாக கூறி வருகின்றனர்.