பஸ்சில் மாணவர்கள் தொங்கல் பயணம்! கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
பல்லடம்: பல்லடம் அருகே, பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு பஸ்சில், ஆபத்தான நிலையில் தொங்கல் பயணம் மேற்கொள்கின்றனர்.பல்லடம், கரடிவாவி வழியாக ஊத்துக்குளி வரை செல்லும் அரசு பஸ் 17ஏ. இந்த பஸ்சில், நேற்று காலை பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர், படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணித்தனர். இதனை சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:கரடிவாவி வழியாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி கிடையாது. கரடிவாவியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து செல்லும் மாணவர்கள் அரசு பஸ்களை நம்பியே உள்ளனர்.குறைந்த பஸ்களே இருப்பதால், படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். படிக்கட்டில் தொங்கி கீழே விழுந்ததில், உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகம் நடந்துள்ளன.எனவே, விபத்து அபாயத்துடன் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதை தவிர்க்க, கரடிவாவி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.