லட்சத்தீவில் ஆங்கில வழி கல்வி: கேரள அரசு கடும் எதிர்ப்பு
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் செயல்படும் பள்ளிகளில், எஸ்.சி.இ.ஆர்.டி., எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டத்தின்படி, மலையாள மொழி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கேரள அரசின் பாடத்திட்டத்தை பயன்படுத்தியே இங்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு முதல் இங்கு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஆங்கில வழி கல்வி முறை அமல்படுத்தப்படும் என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள அரசு, இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி நேற்று கடிதம் எழுதினார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:லட்சத்தீவில் உள்ள, 34 பள்ளிகளில் படிக்கும் 12,140 மாணவர்கள் மலையாளம் மற்றும் ஆங்கிலம் வாயிலாக கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை ஆங்கில வழியாக மட்டுமே படிக்க வேண்டும் என்ற உத்தரவு, கல்விக்கான மாணவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இந்த நடவடிக்கை மாணவர்களை பல்வேறு விதத்தில் பாதிக்கும்.சி.பி.எஸ்.இ., எனப்படும் ஒரே பாடத்திட்டத்தை திணிப்பதன் வாயிலாக, மாணவர்களின் கலாசார சூழலுடன் இணைந்த கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கல்வி உரிமைச் சட்டத்தின் சாரத்தை லட்சத்தீவு நிர்வாகம் புறக்கணிக்கிறது.எனவே, மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் இந்த உத்தரவை, யூனியன் பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.