உள்ளூர் செய்திகள்

தேசிய தகுதி தேர்வில் மோசடி: மூவர் குழு போலீசில் சிக்கியது

லக்னோ: உ.பி.,யில் உள்ள அலிகார் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறப்பு அதிரடிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள கபானா பகுதியில் சன்ஸ்டார் பப்ளிக் பள்ளி உள்ளது. இங்கு, நெட் எனப்படும், ஆசிரியர் பணிக்கான, தேசிய தகுதி தேர்வின் போது பெண் ஒருவர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அவருக்கு கேள்விக்கான பதில்கள், ஆன்லைன் வாயிலாக பகிரப்படுவதாகவும் சிறப்பு அதிரடி படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தேர்வு எழுதிய பெண் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விடுத்து வேறு இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதுவதை கண்டறிந்தனர்.இது தொடர்பாக, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது ஜிதேந்திர சின்சின்வார், கான்ஸ்டபிள் கிருஷ்ணகுமார், சமாய் சிங் ஆகியோர் தன்னை இடம்மாறி அமர்ந்து தேர்வு எழுத சொன்னதாக தெரிவித்தார்.அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். தேர்வுக்கு உதவிய கணினி, 13 ஜெராக்ஸ் இயந்திரங்கள், இரண்டு மொபைல் போன்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தை பெற்றுக்கொண்டு மூவரும் அந்த பெண்ணுக்கு தேர்வில் உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட மூவரிடம் விசாரணை நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்