பல்கலை நிதி கையாடல், முறைகேடு விசாரிக்க உயர்மட்ட கமிட்டி அமைப்பு
சென்னை: பல்கலைகளில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக, தணிக்கை துறை கண்டறிந்துள்ள விவகாரங்களை விசாரணை செய்ய உயர்கல்வித்துறையில் உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளின் செயல்பாடுகளில் நிதி கையாளும் முறையை, நிதித்துறையின் உள் தணிக்கை பிரிவு சார்பில், ஒவ்வொரு நிதியாண்டும் தணிக்கை செய்யப்படும்.இந்த வகையில், 2021-22ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், அண்ணா பல்கலையில், வங்கி கணக்கில் இருந்து போலி கையெழுத்திட்டு, 5.40 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதேபோல், அண்ணா பல்கலையின் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில், விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க 44 லட்சம் செலவு செய்தது பாரதிதாசன், அழகப்பா மற்றும் சென்னை பல்கலையில், விதி மீறிய வீண் செலவுகளால் ஏற்பட்ட பல லட்ச ரூபாய் இழப்பு கண்டறியப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் வரும் பல்கலைகளில் நிதி தணிக்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சேபனைகள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து, உரிய தீர்வு காணும் வகையில், உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.தமிழக உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக் தலைமையில், உள் நிதி தணிக்கை மண்டல, துணை இயக்குனரை உறுப்பினர் செயலராக கொண்டு, மேலும், 5 உறுப்பினர்கள் இந்த கமிட்டியில் செயல்படுவர் என, உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.